இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு..! இந்த விஷயங்களை மறந்துடாதீங்க..!
குரூப் 4 தேர்வானது இன்று காலை 9.30 மணி முதல் மதியம்12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வு மையத்திற்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.தேர்வர்கள் 9 மணிக்குள்ளாக தேர்வு வளாகத்திற்கு வரவேண்டும். அதன் பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
தேர்வர்கள் கண்டிப்பாக தங்களுடன் அனுமதிச்சீட்டுடன் (Hall Ticket) மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் அசலினை அறைக் கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். OMR விடைத்தாள் உபயோகிக்கும் முறை குறித்து அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும்.
தேர்வாணைய அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் இதர தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தவறினால், அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், தேர்வு எழுதுவதிலிருந்து எதிர்காலத்தில் விலக்கிவைக்கப்படுவர்.
ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக வினாத்தொகுப்பு தேர்வர்களுக்கு வழங்கப்படும். OMR விடைத்தாளில் வினாத்தொகுப்பு எண்ணை எழுதி விடை அளிப்பதற்கு முன், அனைத்து வினாக்களும் வினாத்தொகுப்பில் எவ்வித விடுதல்களுமின்றி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு இருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவித்து மாற்று வினாத்தொகுப்பினைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.