பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு TNPDCL குட் நியூஸ்..!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. மாநில பாட வாரியம், சிபிஎஸ்இ ஆகியவற்றின் கீழ் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தீவிரமாக தயாராகி வருகின்றனர். இவர்கள் நள்ளிரவு வரையும், அதிகாலையில் எழுந்தும் படிப்பர். எனவே தடையற்ற மின்சாரம் என்பது மிகவும் அவசியம். இதற்கு தமிழ்நாடு மின்சார விநியோகம் கழகம் லிமிடெட் (TNPDCL) ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம்.
ஏனெனில் இவர்கள் தான் மின் விநியோகம், மின் தடை, பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15ஆம் தெதி வரை பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் மின் தடை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
பொதுத்தேர்வுகள் முடிவடையும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஜில்லென்ற வெப்பநிலை காணப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் மின்சார தேவை அதிகரிக்க வாய்ப்பில்லை. பகலில் மட்டுமே அதிக மின்சாரம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும்.
இதை எளிதில் சமாளித்து விடலாம். நிலக்கரி மின் உற்பத்தியை தாண்டி சூரிய ஒளி மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே அடுத்த இரண்டு மாதங்கள் பொதுத்தேர்வு காலகட்டத்தில் மின்சார விஷயத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படாது எனக் குறிப்பிட்டனர். பிப்ரவரியில் வானிலை இதமாக இருக்கும் என்பதால் மின்சார வாரியம் சமாளித்து விடும். ஆனால் மார்ச் மாதம் வந்துவிட்டால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது மின்சார தேவை அதிகரிக்கும்.
இதனால் வெளி சந்தையில் அதிக கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இதை சமாளிக்க போதிய திட்டமிடல்கள் இருப்பதாகவும், அதிக மின்சார பயன்பாடு என்பது அதிக வருவாயை ஈட்டி தரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே நடப்பு கோடைக் காலத்தை சமாளிக்க போதிய திட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.