தவெக சார்பில் 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!
கேரளாவில் அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதின் காரணமாக பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். மேலும் தொடர் கனமழை காரணங்களால் மீட்பு பணிகள் இன்னும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.இன்று ஐந்தாவது நாளாக எட்டிய நிலையில் மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300க்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து தீவிரமாக மீட்பு பணிகளானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் கேரளாவுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். பல்வேறு தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் இந்த நிலச்சரிவால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்ப வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி மற்றும் இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் அத்தியாவசிய பொருட்களான உடைகள், காலணிகள் , போர்வை , தலைகாணி , பக்கெட் , உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் கட்டமாக இன்று காலை கோவை மாவட்டத்தில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து வயநாடு மக்களுக்கு தேவையான பொருட்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என தவெக நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.