1. Home
  2. தமிழ்நாடு

TN DIPR நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது - அண்ணாமலை கடும் எதிர்ப்பு..!

1

பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றதன் நினைவாக கேரள மாநிலம் வைக்கம் நகரில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கி ஆணையிட்டார். இதைத்தொடர்ந்து, பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை இன்று திறந்து வைக்க கேரளாவிற்கு நேற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இந்நிலையில், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் – நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பது தொடர்பான காணொளி, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இந்திய வரைபடம் காட்டப்படுகிறது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்த இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதி இடம்பெறவில்லை. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-

திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR (தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை), நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் இந்த மாநிலம் வழிநடத்தப்பட்டால், மாநில அரசின் துறைசார்ந்த பணிகளைக் கையாள அவர்களால் அமர்த்தப்பட்ட தகுதியற்ற கைப்பாவைகள் இத்தகைய மெத்தனப் போக்கில் செயல்படுவதில் தான் முடிவடையும். இந்தச் செயல் திமுகவின் தேசிய ஒருமைப்பாட்டைப் புறக்கணிக்கும் செயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்


என்றும், இதுபோன்று மீண்டும் செய்யத் துணியக்கூடாது என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Trending News

Latest News

You May Like