அஸ்ரா கர்க் உள்ளிட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு..!!

நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.
அதேபோன்று மாநிலங்களில் இருக்கும் மாநில முதல்வர்களும் சட்டப்பேரவைகளில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றுவது நடைமுறையாக உள்ளது. அதற்காக தமிழ்நாட்டின் பல்வேறுகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மெரீனா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் காவல்துறையினரின் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அதற்கான ஒத்திகை செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெறும் நாளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கப்படுவது முக்கிய மரபாகும். சுதந்திர தின நாள் கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் தனது கைகளால் காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்குவார்.
சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் காவல் பதக்கம் பெறுவதற்கு 6 காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் ஆர்.குமார்
உள்ளிட்ட 6 பேர் முதலமைச்சர் காவல் பதக்கங்களை பெறவுள்ளனர்.
போதைப் பொருள் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அவர்களுக்கு இந்த பதக்கம் அறிவிக்கபப்ட்டுள்ளது.