திருவண்ணாமலை துயரம்: நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால்... - துணை முதல்வர் உதயநிதி
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.
அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மண்சரிவு, பாறைகள், வீடுகளின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒவ்வொருவரின் உடலாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்கை வைத்தது.18 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முயறிசியில் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களின் அடையாளம் தெரிந்தது. ராஜ்குமார் - மீனா தம்பதி, அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் மூன்று பேர் என 7 பேரும் சிக்கியிருந்தனர். உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு:- ராஜ்குமார் ( வயது 32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா ( 12), வினோதினி (14), ரம்யா (12) என 7 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை வ உ சி நகருக்கு வந்தடைந்தார்.
அப்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று நினைத்தோம். இப்படி நடந்திருக்க கூடாது. இது ஒரு துயரமான சம்பவம் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: - வ உ சி நகர் மக்கள் வெளியே வர தயார் என்றால் அரசு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க தயாராக உள்ளது. மக்கள் வெளியே வந்தால் அவர்களுக்கு என்று தனி திட்டமே போடப்படும். மண் சரிவு தொடர்பாக ஐஐடிக்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தி உள்ளோம். திருவண்ணாமலையில் உண்மையாகவே துயர சம்பவம் நடந்துள்ளது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம்.. இவ்வாறு அவர் கூறினார்.
.png)