திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேரம் அறிவிப்பு..!
கிரிவலம் வருவதன் மூலம் பாவங்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும், நோய் நொடிகள் அகலும், மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனதார அண்ணாமலையாரை நினைத்து இந்த கிரிவலத்தைச் செய்வதால், நினைத்த காரியங்கள் ஈடேறும். பௌர்ணமி கிரிவலம், திருவண்ணாமலையின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரம் குறித்த தகவல்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாத பெளர்ணமி ஜூலை 10ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று அதிகாலை 02.36 மணிக்கு துவங்கி, ஜூலை 11ம் தேதி அதிகாலை 03.11 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஜூலை 10ம் தேதியன்று காலை 11.35 மணிக்கு கிரிவலத்தை துவங்கி, ஜூலை 11 ம் தேதி பகல் 01.30 மணிக்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு கிழமை, திதி, மாதம், நட்சத்திரம், நேரம் ஆகியவற்றில் கிரிவலம் செல்வதற்கு ஒவ்வொரு பலன்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி வியாழக்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சகல விதமான திருமணத் தோஷங்கள் நீங்கும். ஞானம், செல்வ செழிப்பு கிடைக்கும். குரு பகவானின் அருள் கிடைக்கும். நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெருகும். சகல விதமான தோஷங்களும் விலகும். ஜூலை 10ம் தேதி பூராடம் நட்சத்திரத்துடன் வருகிறது. பூராடம் நட்சத்திரத்தின் தெய்வம் வருண பகவான். அதனால் இந்த நட்சத்திரம் வரும் நாளில் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.