இனி ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தினமும் 1500 தரிசன டிக்கெட் வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் மதிப்பு கொண்ட வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வருகிறது.
இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாள் ஒன்றுக்கு 500 என்ற அடிப்படையிலும், கவுன்டர்களில் அங்கு வந்து கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர திருப்பதி விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 100 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனத்தின் அடிப்படையில் தினமும் 2,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலா 10,500 ரூபாய் செலுத்தி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் கட்டுப்பாடு இல் லாமல் டிக்கட்டுகள் வழங்கப்படுவதால் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கான தரிசன நேரம் வெகுவாக அதிகரித்தது.
அதன் தாக்கம் சாதாரண பக்தர்கள் தரிசன நேரத்தை பாதிப்படைய செய்கிறது. எனவே இந்த மாதம் 22-ம் தேதி முதல் தினமும் திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் 900 டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் 100 டிக்கெட்டும், ஆன்லைனில் 500 டிக்கெட்டுகளும் என மொத்தம் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மட்டுமே தினமும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.