பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்..!
திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக, சர்வ தரிசனத்திற்கு (இலவச தரிசனம்) வரக்கூடிய பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அவர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கனில் உள்ள நேரத்தில் வரிசையில் நின்றால் விரைவில் தரிசனம் செய்ய முடியும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் இந்த டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்று, சர்வ தரிசன வரிசையில் நேரடியாக வந்து டிக்கெட்களை பெற்று, சுவாமி தரிசனம் செய்யலாம்.
இதற்கும் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். டிக்கெட் பெறுவதற்கும் காத்திருக்க வேண்டும். டிக்கெட் பெற்ற பிறகு தரிசனத்திற்கும் காத்திருக்க வேண்டும். ஆனால் ஏராளமான பக்தர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வரிசையில் வந்து நிற்கத் தொடங்குகின்றனர்.
இதே போல் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்களும் முன்கூட்டியே வந்து விடுகின்றனர். இதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்களை தரிசன வரிசையில் நுழைய தேவஸ்தானம் அனுமதி அளிக்கிறது.
ஆனால், இன்னும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வெகு முன்னதாகவே வந்து, வெளியில் காத்திருக்கும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் சிறப்பு தரிசன டோக்கன் வாங்கும் பக்தர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வரிசைக்கு வர வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பக்தர்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் சியாமளாராவ் பேசியபோது, பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, டைம் ஸ்லாட்டை சரியாக பின்பற்றவேண்டும். திருமலையில் பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.
திருப்பதி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக அறிவிப்புகளை வெளியிட உள்ளோம். பக்தர்கள் முன்கூட்டியே வந்து வரிசையில் காத்திருக்காமல், இடைவெளி நேரத்தில் திருப்பதியில் உள்ள மற்ற கோவில்களுக்குச் செல்லலாம் அல்லது திருமலையில் உள்ள ஆன்மிக தலங்களுக்குச் செல்லலாம் என்று தெரிவித்தார்.