சிறுத்தையை விரட்ட படியேறும் பக்தர்களுக்கு கைத்தடி..!!

திருமலை திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் படியேறிச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மீது வன விலங்குகள் தாக்குதல் நடத்துவது சமீப காலத்தில் தொடர்கதையாகியுள்ளது.
கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் மலையேறிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி லக்ஷிதாவை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மலையேறும் பக்தர்களின் வசதிக்காக அவர்களுடைய கையில் 5 அடி உயர தடியைக் கொடுத்து அனுப்பும் திட்டத்தை தேவஸ்தானம் துவங்கியுள்ளது. மேலும் பக்தர்கள் கும்பல் கும்பலாக அனுபப்படுகின்றனர். அவர்களுடன் ஆயுதம் ஏந்திய காவலர்களும் உடனிருப்பார்கள்.
அத்துடன் காலை 5 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே 15 வயதுக்குட்பட்டவர்கள் மலையேற முடியும். காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பைக்குகளில் திருப்பதி மலையில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.