1. Home
  2. தமிழ்நாடு

நேரில் ஆஜராகும்படி நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்..!

1

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, “தேர்தல் பணி, சொந்த பணி காரணமாகவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகிறேன்.” என்று விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பினார் நயினார் நாகேந்திரன்.

இந்தநிலையில் தான் இன்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். முதல் சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் இரண்டாவது சம்மனை நயினார் நாகேந்திரனிடமே போலீஸார் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரின் நண்பர்களை இந்த வழக்கில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையின்போது, “பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரனின் உதவியாளர் பாதுகாப்புக்கு இரண்டு ஆட்கள் வேண்டும் என்று கேட்டதால், தாம்பரம் ரயில் நிலையம் வரை எனது நண்பர்கள் இருவரை அனுப்பி வைத்தேன்” என்று வாக்குமூலம் கொடுத்தார் என்று சொல்லப்பட்டது.

இவரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரின் உதவியாளர் மணிகண்டனை விசாரிப்பதற்காக நெல்லை செல்ல புறப்பட்ட நிலையில், தான் சென்னை கிளம்பிவிட்டதாக நயினார் நாகேந்திரன் சொன்னதன் அடிப்படையில் நெல்லை செல்லவில்லை என்றும், தொடர்ந்து இன்று காலை சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்த நயினார் நாகேந்திரனை சந்தித்து இரண்டாவது சம்மனை தாம்பரம் போலீஸார் நேரில் வழங்கியுள்ளனர். அதன்படி, மே மாதம் 2ம் தேதி நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like