திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

முருகப் பெருமான் சூரனை வதம் செய்து, அவரது அவதார நோக்கம் நிறைவேறிய திருத்தலமாக திருச்செந்தூர் திருத்தலம் விளங்குகிறது. முருகப் பெருமான், குரு பகவானுக்கு காட்சி அளித்து அருளிய தலம், முருகப் பெருமான் சிவ பூஜை செய்யும் கோலத்துடன் காட்சி அளிக்கும் தலம், முருகப் பெருமானே தன்னுடைய திருக்கை வேலால் நாழிக் கிணற்றை உருவாக்கிய தலம், அபிஷேகத்திற்கு பிறகு முருகனின் திருமேனியில் வியர்க்கும் அதிசயம் நடக்கும் தலம் என பல பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டுள்ள தலம் திருச்செந்தூர் திருத்தலம். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி பெரு விழாவும், நிறைவு நாளான சூரசம்ஹார விழாவும் உலகப் புகழ்பெற்றதாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன. திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்து விட்டதால் கோவில் கும்பாபிஷேகத்திற்கான தேதி மற்றும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் நேரம் மட்டும் தேர்வு செய்வதில் இழுபறி இருந்து வந்தது. இந்நிலையில் நேரமும் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் முடி காணிக்கை மண்டபம், நாழி கிணறு செல்லும் பாதை உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து, அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசித்து செல்லுவதற்கான ஏற்பாடுகள், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதையில் இருக்கும் பக்தர்களுக்கு தேவைப்படும் குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பணிகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வந்தது.
இந்த புதிய அறிவிப்பின் படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 07ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டு விட்டதால் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற துவங்கி உள்ளன.
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமையில் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இதை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளுடன் சேர்த்து பக்தர்களுக்கான தங்கும் வசதி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.