திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு..!

திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடந்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத்தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில நிர்வாகம் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8 ஆயிரம் சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்விசாலை அமைக்கப்படுகிறது. வேள்விசாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும்.
மேலும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார்மூர்த்திகளை கொண்டு பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.