நாளை டைடல் பார்க் திறப்பு... 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மினி டைடல் பூங்கா திட்டத்தை பல மாவட்டங்களில் அரசு செயல்படுத்தி வருகிறது.
விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா, கோவை, திருச்சி, மதுரை பகுதிகளில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல சிறிய நகரங்களில் டிட்கோ, எல்காட் நிறுவனம் இணைந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் டைடல் பார்க் அமைப்பதற்கு 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை மாநகரத்தின் வடமேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு, அடிப்படை வசதிகளின் தேவை வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா துவங்க தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.279 கோடி செலவில், 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில், 21 மாடிகளைக் கொண்டதாக பட்டாபிராமில் டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.
இங்கு 927 கார்கள், 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, உணவகம், 24 மணி நேர கண்காணிப்பு பாதுகாப்பு வசதி, உடற்பயிற்சிக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், தியான அறை, மின்சார வாகனங்கள் சார்ஜிங் வசதி, மருத்துவ மையம் ஆகிய பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாடியில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் 13, 16-வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு மாடிகளில் அலுவலகம் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு பிரீமியம் கட்டணம் வசூல் செய்யப்படும்.
பட்டாபிராமில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைடல் பார்க் மூலம் 5 - 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (நவம்பர் 22) திறந்து வைக்கிறார்.