'துப்பறிவாளன்' பட நடிகையை வீட்டில் கைது செய்த போலீஸ்..!

போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கெருகம்பாக்கம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர்.
இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த பெண் ஒருவர், நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், ஓட்டுநரிடம் சென்று இப்படியா பேருந்து ஓட்டுவீர்கள் என்று திட்டி விட்டு, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டார்.
தன்னை போலீஸ் என்று கூறிய அந்த பெண் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட பிறகு, நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் தன்னை போலீஸ் என்று கூறியதை அடுத்து அவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது. விஷால் நடித்த 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', மற்றும் ரஜினி நடித்த 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார்.
இதையடுத்து ஓட்டுநரின் புகாரின் அடிப்படையில் நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களைத் தாக்குவது என 5 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகை ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் கைது செய்தனர்.