1. Home
  2. தமிழ்நாடு

மும்மொழி கொள்கை.. விஷால் சொன்ன பதில்..!

1

தமிழ்நாடு அரசியலில் மும்மொழி கொள்கை விவகாரம் தான் பெரிதாக வெடித்துள்ளது. மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என திமுகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இருப்பினும், சம்மந்தப்பட்ட திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டவை என்றும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததாலேயே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழக அரசு 2500 கோடி ரூபாயை மட்டுமில்லை.. ரூ.5000 கோடியை இழக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் கூட புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக பாஜக மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவே கருத்து கூறி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும் தமிழக அரசு மூன்று மொழிகள் கற்க விடாமல் தடுப்பதாகக் கூறி வருகிறார்கள். மேலும், மாணவர்கள் இந்தி என்று இல்லை.. எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்றும் அப்படியிருக்கும் போது இது எப்படி இந்தி திணிப்பாகும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதற்குத் தமிழக அமைச்சர்களும் திமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே காரசார விவாதங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே மும்மொழி கொள்கை குறித்து கேள்விக்கு நடிகர் விஷால் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், "மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது வெற்றியும் பெறாது.. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.. எந்தவொரு திணிப்பும் வெற்றி பெறாது.

அதேநேரம் இங்குப் பல பள்ளிகளில் ஏற்கனவே மூன்று மொழிகளைச் சொல்லித் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் அவை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பசங்க என்ன படிக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் தான் முடிவெடுக்கிறார்கள். எந்த மொழியில் படித்தால் பலன் இருக்கும் என்பதை எல்லாம் யோசித்தே பெற்றோர் முடிவெடுக்கிறார்கள். முதலில் நான் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நான் வாழ்த்துகளை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நல்ல தூங்கி எழுந்து தேர்வு எழுதச் செல்லுங்கள். சரியான நேரத்தில் தூங்கினால் மட்டுமே சரியாகத் தேர்வு எழுத முடியும்"

மேலும், அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில். அதில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் எல்லாம் இறைவன் கையில் என்பதைப் போலக் கையை மட்டும் காட்டினார்.

 

Trending News

Latest News

You May Like