ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேரில் மூவருக்கு ஒரே நாளில் திருமணம்!

கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார், ரமாதேவி தம்பதிக்கு கடந்த 1995ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா மற்றும் உத்ராஜன் என பெயர் வைத்தனர்.
இவர்களின் ஒன்பதாவது வயதில் தந்தை பிரேம்குமார் இறந்துவிட்டார். அதன்பின்னர் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு ஐந்து பேரையும் வளர்த்துள்ளார். ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டுபேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர்.
நான்கு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க அவரது தாய் முடிவு செய்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில் மூன்று பெண்களுக்கு சிறப்பாக திருமணம் நடந்துள்ளது.
ஆடைவடிவமைப்பாளரான உத்ரா மஸ்கட்டில் ஓட்டல் மேனேஜராக பணிபுரிந்து வரும் அஜித்குமாரையும், ஆன்லைன் எழுத்தாளரான உத்தாரா வீடியோ பத்திரிகையாளர் கே.பி.மகேஷ்குமாரையும், மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுநராக உள்ள உத்தமா மஸ்கட்டில் கணக்காளராக உள்ள வினித்தை திருமணம் செய்து கொண்டனர்.
நான்காவது மகள் உத்ரஜாவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவர் கொரோனா காரணமாக வெளிநாட்டில் சிக்கிக்கொண்டார். அவர் நாடு திரும்பியதும் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in