விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு..!
விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிக முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தினாலும் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதினாலும் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இன்று காலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வராக நதி மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்றில் திடீரென பயணி ஒருவர் வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்ட ஓட்டுநர் சட்டென்று வாகனத்தை இடது புறமாக சாலை ஓரம் நிறுத்த முயன்றுள்ளார். அப்பொழுது அதனை பின் தொடர்ந்து வந்த கார் அதனை கவனிக்காமல் திடீரென காரின் பின்பக்கம் மோதியது. அதன்பின் வந்த மூன்றாவது காரும் மோதியது.
இதில் 3 கார்களும் கடும் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.