இனி அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெற வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு..!
நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் வருகின்ற 30ம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. வருகின்ற ஜன. 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்காதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த 2 கோயில் விழாக்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தனியார்களும், அமைப்புகளும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்குவது வழக்கம்.
அவ்வாறு, அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி, உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும்.
மேலும், அன்னதானம் வழங்குவதற்கு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று பெற ஆன்லைன் மூலம் எப்ஓஎஸ்சிஓஎஸ்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், நாமக்கல் கூடுதல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, உணவுப்பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலக தொலைபேசி எண்-04286 299429 மற்றும் 99949 28758 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.