புதிய வீடு தேவைப்படுவோர் வாங்க.. அழைக்கிறார் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர்..!
புதிய வீடு தேவைப்படுவோர் வாங்க.. அழைக்கிறார் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர்..!

சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்புக்கு தவணையை முறையாக செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து புதிதாக கட்டப்படவுள்ள வீடுகள் திட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை மண்டல செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்காநல்லூரில் உள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடுதாரர்களில் 127 பேர் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் அவர்களது ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
ஆனால், ஒதுக்கீடுதாரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்ததில், தவணை தொகையை முழுமையாக செலுத்தியிருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் முழுத் தொகையையும் செலுத்திய பட்டியலில் 54 ஒதுக்கீடுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. 73 பேர் தவணை தொகையை செலுத்தாமல் உள்ளனர்.
அவர்களும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தோ, கட்டணங்களைச் செலுத்தியோ தங்களது பெயர்களை பட்டியலில் இடம் பெறச் செய்து கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பு பணிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் சூழலில், சிதிலமடைந்த சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பதற்கான வரைபடம் இறுதி செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை மண்டலம் மேற்கொண்டு வருகிறது.