அதிகாலையில் பெரும் விபத்து : தொப்பூர் கணவாயில் லாரி அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதி விபத்து..!
தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று கட்டமேடு கணவாய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டு இருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு டாடா ஏஸ் சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அவர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
விபத்து நடந்த இடத்தில் உடனடியாக தொப்பூர் காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொப்பூர் கணவாய் சாலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி சரக்கு லாரி அடுத்தடுத்த 3 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.