தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களை அழிக்கும் மக்கள்..!!

இந்நிலையில் கிராம மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகேவுள்ள சவலாப்பேரியில், சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.
இதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனர். அதன்படி அக்காநாயக்கன்பட்டி, பூவேடி, கொடியன்குளம், சவலாப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்கிற விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தினர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து, பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்.
மின் கம்பங்கள், நீர் தேக்கத் தொட்டிகள், பேருந்து நிறுத்தங்களில் இருந்த சாதிய அடையாளங்களை பெயிண்ட் ஊற்றி அழித்தனர். பெரியவர்கள் பார்த்து தான் தற்போதைய தலைமுறையும் சாதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். அதனால் பெரியவர்கள் சகோதரத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.
கிராம மக்களின் இந்த முன்னெடுப்பை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார். வரும் 30-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சாதிய அடையாளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறினார்.