இந்த ஒரே ஒரு நாமம் போதும்...வாழ்வில் அற்புதம் நடக்கும் - சத்குரு..!

வாழ்க்கையை மாற்றி, பல அற்புத மாற்றங்களை பெறுவதற்கும், முக்தி நிலையை அடைவதற்கும் சிவ பெருமானின் ஒரே ஒரு நாமம் போதும் என சத்குரு வழிகாட்டுகிறார். அது என்ன நாமம்? அந்த மந்திரத்தை எப்படி சொல்ல வேண்டும்? அந்த நாமத்தை எதற்காக சொல்ல வேண்டும்? அப்படி சொன்னால் என்ன நடக்கும்? என்பதையும் அவரே விளக்குகிறார். சிவனின் இந்த நாமத்தை நாமும் தினமும் உச்சரிக்கலாம். இந்த நாமம் பிரபஞ்சத்தில் திறவு கோல் என சொல்லப்படுகிறது.
‘சிவ ஷம்போ' எனும் மந்திரத்தை தினமும் ஒருமுறையேனும் நாம் உச்சரித்தால்... பிரபஞ்சத்தின் திறவுகோலாய் மாறும். சத்குரு கூறுகையில், நவீன விஞ்ஞானத்தில் இந்த முழு பிரபஞ்சமே அதிர்வுகள் ஆனது தான் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிர்வுகள் இருந்தால், அங்கு சத்தமும் இருக்கும். எனவே இந்த பிரபஞ்சமே சப்தத்தின் கலவையாகும். சப்தங்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலினால், பிரபஞ்சத்தின் திறவுகோலாக சில விதமான சப்தங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த சப்தங்களை சரியான நேரத்தில் தகுந்த தீவிரத்தோடு உச்சரித்தால், அது உங்கள் எல்லைகளை எல்லாம் உடைத்து, உங்களை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்லும்.
தினமும் ஒரே ஒரு முறையாவது ஆத்மார்த்தமாக, உங்களுள் இருக்கும் அனைத்தையும் கொண்டு, "சிவ-ஷம்போ" என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். இதனை நீங்கள் செய்து பாருங்கள், அது உங்களுக்குள் புதிய சாத்தியங்கள் மலர ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்கும். "சிவா, ஷம்போ," என்ற சப்தங்களும் இவ்வகையான திறவுகோல்கள்தான். நீங்கள் இதனை உங்களையே உடைக்கவும், பிளக்கவும் பயன்படுத்த வேண்டும். திடத்தன்மையுடைய உங்களைத் திறந்த நிலையாக்கி முற்றிலும் ஒரு புது பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல இதனைப் பயன்படுத்த வேண்டும்.
சிவா, சிவா, சிவா என்று மலைகளை ஏறுவதற்கு அல்ல. அதற்காக அந்த மந்திரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த சப்தங்களை உங்கள் மூச்சுக்காற்றாகவே சுவாசிக்க வேண்டும். அது உங்களுள் எப்போதுமே ஒலித்துக் கொண்டு இருக்கவேண்டும். அதற்கான உகந்த சூழ்நிலை ஏற்பட்டால், அது உங்களைப் பிளந்துவிடும் தன்மையுடையது. அதன்பின், முற்றிலும் புதிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கத் தொடங்கும். அதனால் "சிவ-ஷம்போ" என்ற மந்திரத்தை, வேறு பயன்பாட்டிற்காக உபயோகிக்கத் தேவை இல்லை. நீங்கள் ஷம்போ என்று சொல்வது, அந்த சப்தத்துடன் நீங்கள் கலந்துவிடுவதற்காக. நீங்கள் ஊட்டியில் ரியல் எஸ்டேட் வாங்கவோ, புது வீடு வாங்கவோ, புது வாகனம் வாங்கவோ, உங்கள் மகளுக்குத் திருமணம் செய்யவோ, இது சொல்வதற்கில்லை. இந்த தேவைகளுக்காக நீங்கள் ‘சிவா’ என்று சொல்வது சரியல்ல. சிவா என்று சொன்னால், நீங்கள் முக்தியை நாடுகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், சிவா என்றால், எது இல்லையோ அந்த தன்மை.
அந்த ஒன்றுமில்லாத தன்மையின் ஆனந்தம், ஒன்றுமில்லாத தன்மையின் பேரானந்தம், அது சிவா எனப்படும். நான் என்ற தன்மை உங்களுக்குள் உடைந்தால்தான், உங்களுக்குள் பேரானந்தம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சில கணத்தில், நீங்கள் பேரானந்தத்தை உணர்ந்து இருப்பீர்களானால், அது உங்கள் தன்மை சிறிதேனும் உடைந்த அந்த சில கணங்களே. உங்களுக்குள் நீங்களே நிறைந்திருந்தால், உங்களால் எப்போதும் ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் சுவைக்க முடியாது.
நம்மை சுற்றியும், நமக்குள்ளும் துடிக்கும் உயிர்த்தன்மையை உணர, அதற்கான சாத்தியத்தை உருவாக்க, தினமும் ஒரே ஒரு முறையாவது, ஒரே ஒரு முறையாவது ஆத்மார்த்தமாக, உங்களுள் இருக்கும் அனைத்தையும் கொண்டு, "சிவ-ஷம்போ" என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். இதனை நீங்கள் செய்து பாருங்கள், அது உங்களுக்குள் புதிய சாத்தியங்கள் மலர ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்கும். தெய்வீகம் உங்களுக்குள் முளைக்க, இது போன்றதொரு சிறு துவாரம் போதும். அதனை நீங்கள் வளர செய்வீர்களானால், நீங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கமாட்டீர்கள். ஒவ்வொரு அணுவும் ஒரு வாசல்தான்! ஒருமுறை ஆதியோகியிடம், ‘‘மனிதன் தன் உச்சநிலையை அடைய எத்தனை வழிகள் உள்ளன’’ என்று கேட்டனர். அவர், ‘‘மனித அமைப்பைப் பயன்படுத்தினால், 112 வழிகள்தான், மனித அமைப்பைத் தாண்டினால், இந்த பிரபஞ்சத்தில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ, அத்தனை கதவுகள் உள்ளன’’ என்றார்.