1. Home
  2. தமிழ்நாடு

மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் - முதல்வர் ஸ்டாலின்..!

1

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை கொண்டாடப்படுகிறது. அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்யா விருந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத திருவோணம் அமைந்துள்ளது.

நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும் அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காண வேண்டும்.

திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான் அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு மீட்பு மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like