1. Home
  2. தமிழ்நாடு

இதனால் தான் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது - ஓபிஎஸ்..!

1

தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்த வரை திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி படு தோல்வியை சந்தித்தன. பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தோல்வியைத் தழுவினார்.

இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்ற எனக்கு 3,41,000 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும் சூழல்தான் தமிழ்நாட்டில் உள்ளது” என்று தெரிவித்தார்.

தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துவிட்டது, பல இடங்களில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “இதுகுறித்து அதிமுகவின் தற்காலிக பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய தலைமையிடம் தான் அந்த கேள்வியை கேட்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடினார்.

பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதற்கு தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அத்துடன், அண்ணாமலையின் கடின உழைப்பும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க மற்றொரு காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார்” என்று கூறினார்.

மேலும், “பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் அனைத்தும் ஒன்றிணையவில்லை எனில் அதிமுகவால் எந்தக் காலத்திலும் வெற்றிபெற முடியாது” என்று வார்னிங் போட்ட ஓபிஸ், தனது அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகரன், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் எங்கிருந்தாலும் வாழட்டும் என்றார் 

Trending News

Latest News

You May Like