இதனால தான் அமித்ஷா அடிக்கடி தமிழகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - சேகர்பாபு அட்டாக்..!

திமுக பொதுக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த ஒரே வாரத்தில் அதே மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
நிகழ்வில் பேசிய அமித்ஷா, ஊழலில் திளைக்கும் திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அமித்ஷாவின் வருகை திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு பயமோ அல்லது பதற்றமோ எதுவும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வலுவோடும் தெளிவோடும் உள்ளது. பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது.
பாஜகவிடம் பதற்றம் இருப்பதால் தான் , ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அமித்ஷா உள்ளிட்டோர் அவ்வப்போது தமிழகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் முதல்வரை பார்த்துதான் ஒன்றியமே பதற்றத்தில் இருக்கிறது என்பதற்கு அமித்ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டுதான்” என்று தெரிவித்தார்.
கிளாம்பாக்கத்தில் பேருந்து இயக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு, “திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. சர்வதேச விமான நிலையங்களுக்கு இணையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடர் விடுமுறை காரணமாக இரவு நேரத்தில் பயணிகள் அதிகளவு கூடியதால், பேருந்துகள் போதுமானதாக இல்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதல்வர் கவனத்துக்கு இது சென்றவுடன், அவரது அறிவுறுத்தலின் பேரில் பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை அமைத்து தந்தோம். ஆட்சியின் மீது எந்த தவறும் இல்லை என்பதால், போக்குவரத்துத் துறை அன்றைக்கு இருந்த நிலையை விளக்கமாக எடுத்துச் சொல்லியுள்ளது. பக்ரீத் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு மக்கள் பயணம் செய்தபோதிலும் போதுமான பேருந்து வசதி செய்துத் தரப்பட்டது.
இரவு நேரத்தில் கூடிய 300 பேருக்கு மட்டும் பேருந்து இல்லை என்பதால் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த பிரச்னையும் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், சிறிய பிரச்னையைக் கூட எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்” என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார்.