கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்வதற்கு முன் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் இதுதான்..!

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கடந்த ஜூலை 7 ஆம் தேதி இவர் வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு அலுவலகத்துக்கு வந்தார்.பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒவ்வொரு நாளும் காலையில் டிஐஜி விஜயகுமார் தனது நண்பர்களுக்கும், போலீஸ் குரூப்பில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் தவறாமல் காலை வணக்கம் மற்றும் சில மெசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட அன்று (ஜூலை 7) காலை 6.40க்கும் வழக்கம்போல வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் அனுப்பியிருக்கிறார் டிஐஜி விஜயகுமார்.
“ஒவ்வொரு நாளும் டிஐஜி விஜயகுமார் ஆன்மீகம், தத்துவம் என்று பல்வேறு மெசேஜ்களில் காலை வேளையில் அனுப்பி வைத்து வருவார். அந்த வகையில் ஜூலை 7 ஆம் தேதி காலை 6.40 க்கு தனது போலீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு மெசேஜை பதிந்திருக்கிறார் விஜயகுமார்.
அது என்னவென்றால் தத்துவமோ, காலை வணக்கமோ அல்ல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, கோவை சரகத்தின் ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் இருக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் குற்றத் தன்மையை பொறுத்து ஏ, ஏ ப்ளஸ் என்று வகைப்படுத்தப்பட்டு அதுபற்றிய விவரங்களை உடனடியாக அவரவர் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அந்த மெசேஜ்.
சட்டம் ஒழுங்கு பற்றிய அரசியல் விவாதங்கள் அதிகரித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியிடம் இருந்து வந்த மெசேஜைதான் அன்று தனது போலீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து உடனடியாக ரிப்போர்ட் செய்யவும் என்று உத்தரவிட்டிருந்தார் டிஐஜி.
ஆக தான் தற்கொலை செய்துகொள்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பாகக் கூட டிஐஜி விஜயகுமார் போலீஸ் பணியைத்தான் பார்த்திருக்கிறார்” என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.