உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத போகும் அணி இது தான்..!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரைஇறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர் முடிவில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
213 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடியது. டேவிட் வார்னர் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்ரம் வந்து வீழ்ச்சியில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிச்சல் மார்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக ஆடிய மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் 47 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். சம்சி மற்றும் கோட்சே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் குறைவான இலக்கு என்பதால் ஆஸ்திரேலியா அணி போராடி இலக்கை எட்டியது.47.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.