இது தான் உலகின் மிக குள்ளமான ஆடு..!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பீட்டர் லெனு. இவர் தன் பண்ணை வீட்டில், ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில், கரும்பி என்ற 4 வயது பெண் ஆடு உள்ளது. இது கனடா நாட்டின் பிக்மி வகையை சேர்ந்தது. இந்த வகை ஆடுகள் இயல்பிலேயே குள்ளமான உடல் தோற்றம் உடையவை.
இவை அதிகபட்சமாக, 1.7 அடி உயரம் மட்டுமே வளரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பீட்டரின் பண்ணைக்கு வந்த நபர் ஒருவர், கரும்பியை பார்த்து, அது இயல்பை விட மிகவும் குள்ளமாக இருப்பதாக கூறினார்.
கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவும் பரிந்துரைத்தார். இதை தொடர்ந்து, கரும்பி ஆட்டை கால்நடை டாக்டரிடம் எடுத்து சென்றார், பீட்டர். அதன் உயரம், நீளம், எடை மற்றும் உடல் தகுதியை டாக்டர் சோதித்தார். அந்த ஆடு, 1.3 அடி உயரம் மட்டுமே இருந்தது.
அது முழு வளர்ச்சியை எட்டிய நிலையில், இயல்பை விட சிறியதாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். இதை தொடர்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு பீட்டர் விண்ணப்பித்தார். கரும்பியை சோதித்த கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தினர், உலகில் உயிர்வாழும் மிகச் சிறிய ஆடு என, கரும்பியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்தனர்.
கரும்பி இப்போது கர்ப்பமாக இருப்பதால், அது போடும் குட்டிகளும் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக பீட்டர் தெரிவித்து உள்ளார்.
Meet Karumbi, the world's smallest goat, who lives her life just 15 inches above the ground pic.twitter.com/pWQ09CLh6m
— Guinness World Records (@GWR) March 20, 2025