இது தான் ரயில் நெரிசல் விபத்துக்கு காரணம் - சொல்கிறது டில்லி போலீஸ்..!

பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவுக்காக டில்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று இரவு கும்பமேளாவுக்கு செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, இரு ரயில்களின் பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்தது தான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14ல் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது, பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நடைமேடை 16க்கு வருவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடைமேடை 14ல் நிற்கும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்காத பயணிகள், ஒட்டுமொத்தமாக நடைமேடை 16க்கு முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடைமேடை 12, 13 மற்றும் 15 ஆகியவற்றிற்கு வரவேண்டிய மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமாகியுள்ளன. இதனால், ரயில்நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர்.