தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு இது தான் காரணம் - கருணாஸ்..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடிகரும், திமுக ஆதரவாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எனது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற வந்தேன். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் வரும் பிப்.22, 23 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய்-க்கு பாதுகாப்பு அளிப்பது என்பது துறை சார்ந்த முடிவாக கருதுகிறேன். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தொடந்து சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான். செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பால் தவறான விஷயங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது, அதனை பார்த்து மற்றவர்கள் அதே தவறை செய்கிறார்கள். இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கிறது என்பதே எனது கருத்து. ஆகவே, அப்படி நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக என்ற மதவாத சக்திகளிடம் இந்தியா மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கடந்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது. அமலாக்கத்துறையை கையில் வைத்து கொண்டு பாஜக இந்தியா முழுவதும் செய்த விஷயங்களை, டெல்லியிலும் செய்திருக்கிறார்கள்.
அதேபோல் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால், நிதி வரும் என்று சொன்னால், அப்படிப்பட்ட நிதியே தேவையில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கைதான். அதனை எந்த காலத்திலும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.