1. Home
  2. தமிழ்நாடு

மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்ததற்கு இது தான் காரணம் - அமைச்சர்கள் விளக்கம்..!

1

மழை பாதிப்பு, சீரமைப்புப் பணிகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் வழியாக மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 6,000 கனஅடி வரை உபரிநீர் திறந்த போதும், பெரிய அளவில் பாதிப்பில்லை.

மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்தது. செம்பரம்பாக்கத்தில் நீர்த்திறப்பு குறைக்கப்பட்டதால் மாம்பலத்தில் வெள்ளம் இனி வடிந்துவிடும். பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ள கனமழையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “நேற்றிரவு முதல் முதலமைச்சர் தூங்காமல் செல்போனில் எங்களை இயக்கியபடி இருந்தார். எங்கெல்லாம் நீர்த்தேக்கம் என தகவல் வந்ததோ, அங்கு செல்ல எங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like