1. Home
  2. தமிழ்நாடு

இது தான் ஓரே தீர்வு - அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை..!

1

வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிக்கையில்., ``கள்ளக்குறிச்சியில் 'மெத்தனால்' என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைக் குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் ‘மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.

இனியாவது மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன. அரசின் 'டாஸ்மாக் ' மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்.

எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம்.

மேலும், “மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவதும் ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். மது விலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மது விலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like