பழையன கழிதலும், புதியன புகுதலும் - இது தான் போகி..!

மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்குப் போக்கி என்று மற்றொரு பெயரும் உண்டு.ஆடிப் பட்டத்தில் விதைக்கப்பட்ட நெல் மணிகள் பயிராகி, கதிராகி அறுவடை செய்து மார்கழி மாதத்தின் கடைசியில் வீட்டிற்குக் கொண்டு வருவது இந்த நாளின் சிறப்பாகும். அதாவது பழையன கழிதலும்...புதியன புகுதலும் இந்நாளில் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்த கருத்தாகும்.
பொங்கலை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு வெள்ளையடித்து, பயன்படுத்தாத பொருட்களைத் தீயிட்டு எரிக்கும் போது, அதனுடன், திருஷ்டியும் எரிந்து புதிய வாழ்க்கை ஆரம்பமாகும் என்பது நம்பிக்கை.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி அன்று, பழைய பொருட்கள் அகற்றி, அவற்றிக்கு பதிலாக, புதிய பொருட்களை இடம் பெறச் செய்வார்கள்.
இதற்காக, நம் மக்கள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் சேரித்து, பெரும்பாலும் வீதியில் போட்டு எரிப்பார்கள். இதனால் மாசு ஏற்படுகிறது என்று, அரசு பல கோடிகள் செலவு செய்து மாசு இல்லாத போகி கொண்டாடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறது.
வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விடுவது என்பது, நம் தத்துவதின் குறீயீடுதான். உண்மையில், போகி அன்று அகற்ற வேண்டிய மாசு, நம் உள்ளத்தில் தான் இருக்கிறது. இதைத் தான் நம் முன்னோர்கள் கூறினர்.
உள்ளத்தின் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும் என்பதை திருவள்ளுவர் .சொல்லித் தருகிறார்.
‛புறத்துாய்மை நீரான் அமையும் அகத்துாய்மை
வாய்மையால் காணப் படும்’ என்கிறார் அவர்.
எளிதில் புரியும் இந்த குறள் போல, வாய்மையை கடைபிடித்தால், அகம் துாய்மையடையும். அதன் பின்னர் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சி பொங்கும்.
அந்த வாய்மை என்றால் என்ன என்றும் திருவள்ளுவரே சொல்லித் தருகிறார்.
‛வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’ என்றார்.
அதாவது, யாருக்கும் தீமை ஏற்படாத வகையில் சொல்வதே ஆகும். இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் இவற்றிக்கு இடம் கொடுக்காத போது மட்டும் தான், வாய்மை உள்ளத்தில் வந்து அமரும்.
இந்த ஆண்டு முதல் நம் மனதில் எழும் தேவையற்ற ஆசைகள், பொறாமை, பகை உணர்ச்சி ஆகியவற்றை களைந்து, சிறப்பான தை திருநாளை வரவேற்போம். பொங்கல் அன்று மட்டும் அல்ல எதிர்காலம் முழுவதும் நம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என உறுதியேற்று, அதன்படி சிந்தித்து செயல்படுவோம்.