இது தான் லிமிட்..! ஒரு நாளைக்கு எத்தனை யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யலாம் தெரியுமா ?
ஒரு நாளில் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக எவ்வளவு பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்திய தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) படி குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் உள்ளன.
அதன்படி பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு, வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் ஆகும். இது வழக்கமான தினசரி பரிவர்த்தனைகளுக்கு இந்த வரம்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில இடங்களில் பரிவர்த்தனை வரம்பு மாறுபடும். அதாவது கல்வி மற்றும் மருத்துக் கட்டணங்களுக்கு வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த டிசம்பர் 8 2023 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிட்ட துறைகளுக்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இந்த பிரிவுகளுக்கான உச்சவரம்பு ரூ.1 லட்சமாகத் தான் இருந்தது. அதன்பின்பு இது மாற்றப்பட்டு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் காப்பீடு தொடர்பான யுபிஐ பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை இருக்கலாம். பின்பு IPO மற்றும் சில்லறை நேரடி திட்டங்களுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ஒரு பரிவத்தனைக்கு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தனிப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டி தங்கள் சொந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் விதிக்கலாம். உதாரணமாக எச்டிஎப்சி (HDFC) வங்கியானது P2P மற்றும் P2M பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் தினமும் 20 யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யலாம். இந்த வரம்பை அடைந்த பிறகு, பரிவர்த்தனைகளை மீண்டும் தொடங்க அவர்கள் 24 மணி காத்திருக்க வேண்டும்.
குறிப்பாக நீங்கள் யுபிஐ பயன்படுத்தி தினசரி நீங்கள் வாங்கும் பொருட்களுக்குப் பணம் செலுத்தினாலும் அல்லது கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அதிகப் பணம் செலுத்தினாலும், சுமூகமான பரிவர்த்தனைகளை உறுதி செய்ய இந்த வரம்புகளைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதேபோல் இந்த யுபிஐ பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவும் யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.