இதுவே முதல் முறை: கணவர் ஓய்வு - மனைவி பதவியேற்பு..!
கேரள மாநில தலைமைச் செயலாளரான வி.வேணுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், சாரதா முரளிதரன் என்பவரை அடுத்த தலைமைச் செயலாளராக நியமிப்பது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில் தான் ஒரு சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது. தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வி.வேணுவின் மனைவி தான் சாரதா முரளிதரன். வி.வேணு ஓய்வு பெற்றதை தொடர்ந்து சாரதா முரளிதரன் தற்போது தலைமைச் செயலாளராக பொறுப்பை ஏற்றுள்ளார்.
புதிய பொறுப்பை ஏற்ற தமது மனைவிக்கு வி.வேணு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஒரே துறையில் அல்லது ஒரே மாவட்டத்தில் பணியாற்றியது உண்டு. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் கணவருக்கு பின்னர் மனைவி அதே தலைமைச் செயலாளர் பதவியில் அமர்வது இதுதான் முதல்தடவை.
கேரளாவில் இதற்கு முன்னர், கணவர் தலைமைச் செயலாளராக இருந்து சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனைவி அதே தலைமைச் செயலாளர் பதவி வகித்த வரலாறுகள் உண்டு. ஆனால் இப்போது கணவர் பதவிக்காலம் முடிந்தவுடன், உடனடியாக அதே தலைமைச் செயலாளர் பதவியை மனைவி வகிப்பது இதுவே முதல்முறை.
1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சான சாரதா முரளிதரன், பல்வேறு பொறுப்புகளில் திறமையை வெளிப்படுத்தியவர். 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை குடும்பஸ்ரீ என்ற திட்டத்தில் தலைமை அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு மாநில அரசின் பாராட்டுகளை பெற்றவர். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரி, பஞ்சாயத்துராஜ் இணைச்செயலாளர், பட்டியலின மக்கள் வளர்ச்சித் துறை இயக்குநர் , உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என பல பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.