1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இது முதல் முறை..!. தீயணைப்புத் துறை அதிகாரி டூ ஐஏஎஸ் அதிகாரி..!

1

தமிழக தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என்.பிரியா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்தார். கடந்த 2003-ம் ஆண்டு குரூப் 1 பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரியாவுக்கு, தற்போது மாநில அரசு அல்லாத குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது.

மாநில அரசில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஆண்டுதோறும், குரூப் 1 அதிகாரிகளுக்கு மாநில அரசு பரிந்துரை அடிப்படையில், ஐஏஎஸ் அதிகாரிக்கான அந்தஸ்தை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரனை தேர்வு செய்து, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது தமிழகத்தில் இது முதல் முறையாகும்.

யார் இந்த பிரியா ரவிச்சந்திரன் ?-

சேலத்தைச் சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன், சேலத்தில் பள்ளிப்பையும், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், எம்.ஃபில் பட்டமும் பெற்றார். தனது 24 வயதில் அதாவது 1999ஆம் ஆண்டில் குரூப் 1 பணிக்கு தேர்ச்சி பெற்றார்.

2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசில் குரூப் 1 அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் முதன் முதலில் தனது பணியை நாகப்பட்டினத்தில் தொடங்கினார் பிரியா. தீயணைப்பு படை அலுவலராக வேலைக்குச் சேரும்போது, பிரியா 2 மாத கைக்குழந்தைக்குத் தாயாக இருந்தார். இருப்பினும், தீயணைப்புத் துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டார்.

தீயணைப்பு பணியில் கில்லி: இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற தீ பயிற்சி கல்லூரியிலும் பயின்றார். பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். கோவை மண்டலத்திலும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோட்ட அலுவலராக பணியாற்றியுள்ளார் பிரியா. கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

பின்னர், சென்னையில் தீயணைப்பு துறையின் மத்திய சென்னை கோட்ட அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார் பிரியா ரவிச்சந்திரன். 2012 ஜனவரியில், பொங்கல் பண்டிகையின்போது, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த முக்கியமான அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தனது படையினருடன் பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார்.

தீயை அணைக்க தீ அணைப்பு இயந்திரங்கள் ஒரு பக்கம் போராடினாலும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ எந்தப் பக்கம் இருந்து பரவத் தொடங்கியது என்பதை அறிந்தால் தான் தீயை விரைந்து அணைக்க முடியும் என்பதால், தனது உயிரையே பணயம் வைத்து, எரியும் நெருப்புக்குள் புகுந்தார் பிரியா. தீயணைப்பு நடவடிக்கையின்போது மேற்கூரை விழுந்து படுகாயமடைந்தார் பிரியா. முடிவில், 15 தீயணைப்பு வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் என 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஐந்து மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். மின் கசிவுதான் தீ விபத்துக்கு மிக முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. வீர தீர விருது: படுகாயமடைந்த பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பிரியாவின் துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, 2012ஆம் ஆண்டு அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் இவருக்கு வீர தீர செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like