1. Home
  2. தமிழ்நாடு

இதுவே முதல் முறை..! நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்..!

1

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரிவான விசாரணைகள் நடைபெற்று வந்தன.


இதன் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில், '' ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200 ஆவது பிரிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டு இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்.” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக செயல்படுவதை ரத்து செய்து முதல்வரையே வேந்தராக நியமித்தல், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே வேந்தராக செயல்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது." என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறி இருந்தார்.


இந்த பரபரப்பான சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 16 ஆம் தேதி சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்க்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உயர்க்கல்வியை மேம்படுத்த ஆலோசனை வழங்க உள்ளனர். தமிழ்நாட்டின் பல்கலைக் கழக வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like