பொங்கல் பரிசு வாங்காத மக்களுக்கு இது உண்மையிலேயே குட் நியூஸ்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி - சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது . பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் பணி நிமித்தமாக மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் 34,793 ரேஷன் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெரியகருப்பன், இதன் மூலம் 85 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.
மேலும், “மீதமுள்ள ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வருகின்ற ஜனவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட ரேஷன் அட்டை தாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெற வேண்டும்” என்று பெரியகருப்பன் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசு வாங்காத மக்களுக்கு இது உண்மையிலேயே குட் நியூஸாக அமைந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் உள்ளதால் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஏறக்குறைய நிறைவுபெறவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசு வட்டாரங்களில்.