இது அயன் பாக்ஸா.. இல்ல தங்க பாக்ஸா..ஆடிப்போன ஆபீஸர்ஸ்..!
டெல்லி ஏர்போர்ட்டில் 2 பேரிடம் 979 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு வந்த விமானத்தில், இந்தியாவை சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
முதலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டது.. எதுவுமே சிக்கவில்லை. பிறகு எக்ஸ்ரே மூலம் சோதனை செய்ததில், சில சந்தேகங்கள் எழுந்தன. அதனால், அந்த பயணியின் உடமைகளை பிரித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சூட்கேசுக்குள் எலெக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த அயர்ன் பாக்ஸை வெளியே எடுத்து சோதனை செய்தபோது, அதற்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட ரூ.46.80 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து வந்த இன்னொரு விமானத்தில் வந்த ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரது சூட்கேஸிலும் 379 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கம், மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சமாகும். இந்த 2 தங்க கடத்தல் சம்பவமும் ஒரே நாளில், ஒரே ஏர்போர்ட்டில் நடந்திருக்கின்றன.