பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி..!

தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால்(எம்.பி.ஏ.,) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் ஜக்தீப் தன்கர் பங்கேற்று பேசினார்.இந்த நிகழ்வில்,கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைகளுக்கான மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் துல்லியமான ராணுவத் தாக்குதல்கள், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு சரியான செய்தியைக் கொடுத்தன.
இது உலகளாவிய செய்தியை அனுப்பியுள்ளது. பயங்கரவாதம் இனி தண்டிக்கப்படாமல் இருக்காது என்று பீகாரிலிருந்து பிரதமர் மோடி முழு உலகிற்கும் வழங்கிய செய்தி. இது பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை முன்மாதிரியானது.
பயங்கரவாதிகளை இலக்காக மட்டுமே கருதி, நமது நெறிமுறைகளை மனதில் கொண்டு, சர்வதேச எல்லைக்கு அப்பால் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் ஒரு திருப்தி.
இந்த நடவடிக்கையால் அடையப்பட்ட வெற்றி குறித்து, யாரும் அதற்கான ஆதாரத்தைக் கேட்கவில்லை. இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், கடல்சார் சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. நாடு அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்