1. Home
  2. தமிழ்நாடு

அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Q

மத்திய அரசின் செய்தி செனலான டிடி(தூர்தர்ஷன்) இலச்சினையை(லோகோ) காவி நிறமாக மாற்றப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மக்களவை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்வா அமைப்புகள் பிரதானப்படுத்தும் காவி நிறத்தை தூர்தர்ஷன்(டிடி) சேனலின் இலச்சினையின் வண்ணமாக மத்திய பாஜக அரசு மாற்றியிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டிடி நியூஸ் சேனலின் லோகோ நிறத்தை காவியாக மாற்றப்பட்டிருப்பது மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகிறார்கள்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் எவ்வாறு இந்த தேர்தல் நடத்தை விதிமீறலை அனுமதித்தது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், மத்திய அரசின் டிடி சேனலின் லோகோ காவி நிறமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
”உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்””, இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Trending News

Latest News

You May Like