உத்தரவு பெட்டியில் திருவோடு, திருநீறு, திருப்புகழ் புத்தகம்..! HMPV வைரஸ் பரவலை தான் உணர்த்துகிறதோ..?
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து வழிபடப்படும் பொருட்கள் உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், வரப் போகும் நன்மை-தீமைகளை முன் கூட்டியே உணர்த்துவதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருட்களுக்கு தொடர்புடைய நிகழ்வுகள் உலகில் நடப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக மனித குலத்திற்கு வரப் போகும் ஆபத்துக்களை ஆண்டவர் உத்தரவுப் பெட்டி முன்கூட்டியே உணர்த்து வருவது பலரையும் வியப்படைய வைப்பதுடன், ஆண்டரின் அடுத்த உத்தரவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.
2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மண் அகல் விளக்கு வைத்து வழிபடப்பட்டது. அது வைக்கப்பட்ட சில நாட்களிலேயே திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஒரு கலசத்தில் கங்கை தீர்த்தம் வைத்து வழிபடப்பட்டது. இது வைக்கப்பட்ட 9 நாட்களிலேயே மீண்டும் மாற்றப்பட்டு டிசம்பர் 17ம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் ஒருவரின் கனவில், திருவோடு நிறைய திருநீறு நிரப்பி, ருத்ராட்சம் மற்றும் அவற்றோடு நோய்கள் திருப்புகழ் பாடல் புத்தகமும் வைக்கும் படி உத்தரவு வந்தது. திருவோடு, திருநீறு, ருத்ராட்சம், திருப்புகழ் இந்த 4 பொருட்களும் தெய்வீக தன்மை கொண்டவை. இவைகள் எவற்றை குறிக்கின்றன என பக்தர்கள் யோசித்து வந்தனர்.
திருநீறு அணிவதும், திருப்புகழ் படிப்பது தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும். இவைகள் நோய்களை தீர்க்கக் கூடியவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நான்கு பொருட்களும் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டு இன்னும் ஒரு மாத கால கூட முடியவில்லை. அதற்குள் உலகம் முழுவதும் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனாவில் வேகமாக பரவி வந்த HMPV வைரஸ், மெல்ல மெல்ல உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவ துவங்கி விட்டது. ஆசிய நாடுகளில் மலேசியா, ஹாங்காங், இந்தியா போன்ற நாடுகளிலும் தற்போது வேகமாக பரவ துவங்கி உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் 6 பேருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கொரோனா காலத்திலும் ஆண்டர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் வைத்து வழிபடப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மஞ்சள், வேப்பிலையை பலரும் பயன்படுத்தி வந்தனர். மஞ்சள் கிருமிநாசினியும் கூட. உலகில் இப்படி ஒரு வைரஸ் பரவ உள்ளதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான் கடந்த மாதமே ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் திருநீறும், திருப்புகழ் புத்தகமும் வைக்கப்பட்டதா? இந்த பொருட்கள் வழியாக நோய் பரவுவதை மட்டும் தான் முன்கூட்டியே உணர்த்தி உள்ளாரா அல்லது அந்த நோய்க்கான சூட்சும மருந்து அல்லது நோய் தீர்க்கும் மருந்தும் இந்த நான்கு பொருட்களுக்குள் அடங்கி உள்ளதா? என பலருக்கும் பல விதமான கேள்விகள் ஏற்பட துவங்கி விட்டது.