திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து..!
இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா படகுகள் சேவையும் தினந்தோறும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் குமரி கடல் பகுதியில் இன்று காலை முதல் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் சுற்றுலா படகு சேவையை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் நிறுத்தியுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்திற்கும் சுற்றுவா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.