திருமாவளவனின் அடுத்த அட்டாக்... மனுநீதி நூலுக்கு எதிராக பிரச்சாரம் !
திருமாவளவனின் அடுத்த அட்டாக்... மனுநீதி நூலுக்கு எதிராக பிரச்சாரம் !

மனு நீதி என்று கூறப்படும் மனுஸ்மிருதி நூல் குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3,4, 5-ம் தேதிகளில் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவ கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்ற வழக்கில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என கூறியுள்ளது. இது வேதனை தருகிறது.
ஒருபுறம் இந்துக்களுக்காக போராடுவதாக கூறி வரும் பாஜகவினர் இந்து பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இதை கண்டித்து 28-ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்கள் உள்பட நாவினை மீறி தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர். இது எல்லாம் தமிழகத்தில் சாதி, மதம் பெயரால் வன்முறையை தூண்ட வேண்டும் முயற்சியில் ஈடுபடுகிறது என்பது தெரிகிறது.
பெண்களை பற்றி பாஜகவினர் தவறாக கூறி வருகின்றனர். எஸ்.வி சேகர் ஊடக பெண்களை இழிவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிககையும் இல்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனுநூல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3,4, 5-ம் தேதிகளில் மகளிர் விழிப்புணர்வு பரப்புரை விசிக நடத்த உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, தலித் மீதான வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.