புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழில் திருமாவளவனின் பெயர் இல்லை..!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது.
விஜய்யின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், விஜய்யை கடுமையாக விமர்சித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக கூட்டணியில்தான் நீடிப்போம் எனவும் பண்டிகை கால ஆஃபர் போல விஜய் அறிவித்து இருக்கிறார் எனவும் காட்டமாக திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.
இதற்கிடையே, சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாளவனும் விஜய்யும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டது.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திருமாவளவன், விஜய்யுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்ற விவாதமும் எழுந்தது. திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவளவனும் பகிர்ந்து கொள்ளவிருப்பதை திமுக தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், புத்தக வெளியீட்டு விழா குறித்த அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் திருமாவளவனின் பெயர் இல்லை. விஜய் புத்தகத்தை வெளியிட, அதனை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் கலந்து கொள்கிறார்.

.png)