ஓபிஎஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி - திருமாவளவன்..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டிலும், இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களிலும் தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை சமூகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களை தாண்டி பௌத்த சமூகமும் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மசூதிகள், தேவாலயங்களை இடிப்பதை போல புத்த விகாரங்களையும், சிலைகளையும் குறிவைத்து இடிப்பது போன்ற நடவடிக்கைகளில் சங்பரிவார் கும்பல் ஆங்காங்கே ஈடுபட்டு வருகிறது," என்று திருமாவளவன் கூறினார்.
மேலும் பேசிய அவர், "ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர பொதுச் செயலாளர் சிவபிரசாத் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு மலையில் புத்தர் சிலையை பராமரித்து வருகிறார். பொதுமக்கள் அந்த இடத்திற்கு வந்து புத்தரை தரிசித்து வருகிறார்கள். அந்த சிலையின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.
அதனை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சிவபிரசாத் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போட்டு அவருக்கு சொல்லொன்னா துயரத்தை ஆந்திர மாநில அரசு செய்து வருகிறது.
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. ஆந்திரப்பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்கிகளின் பிரதேசமாக மாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
சிவபிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு இடிக்கப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும். சிலை இருந்த இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றி அரசு வேலி போட்டு அடைத்துள்ளது. அதனை பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்," என்றார்.
விஜயவாடாவில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
மேலும் "விஜயவாடாவில் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாஜக கைவிட வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்திலும் அவர்கள் காலூன்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டையும் சனாதன மயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு சில அரசியல் கட்சிகளும் சாதிய, மதவாத அமைப்புகளும் துணை போகின்றது என்பது பெரும் கவலை அளிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி இங்குள்ள சில அரசியல் கட்சிகளோடும் சாதிய மதவாத அமைப்புகளோடும் இணைந்து செயல்பட தொடங்கிய பிறகு தான் சாமியின் பெயரால் வன்முறை அதிகரித்துள்ளது. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன.
கவின் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பா?
நெல்லையில் கவின் மிகக்கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம். சம்பவ இடத்தில் அவர்கள் உடன் இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
கவினின் பெற்றோரும் இந்த சந்தேகத்தை முன்வைக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றி இருந்தாலும்கூட சிறப்புப் புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற கண்காணிப்பில் புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சாதி மதத்தின் பெயரால் ஆணவக் கொலைகள் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது.
எனவே ஒன்றிய அரசு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றுவது தான் மிகவும் சரியானது. ஆனால் பாஜக அதில் ஆர்வம் காட்டவில்லை. கவினின் ஆணவக் கொலையை கண்டித்து பாஜக தரப்பில் யாரும் இதுவரை கண்டனம்கூட தெரிவிக்கவில்லை," என்று திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார்.
சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க வேண்டும்
மேலும் பேசிய அவர், "ஆணவக் கொலைகளை கண்டித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் எனது தலைமையிலும் மற்ற மாவட்டங்களில் நிர்வாகிகள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்து உள்ளது. குற்றவாளியின் பெற்றோர் இருவரும் காவல்துறையை சார்ந்தவர்கள்.சிபிசிஐடி காவல் துறையும், தமிழ்நாடு காவல்துறைக்கு உட்பட்டவர்கள் தான். எனவே முதல்வரை சந்தித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்," என்றார்.
திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் மகிழ்ச்சி
"திமுக கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதை கூட்டணி தலைவர் தான் முடிவு செய்வார். ஓபிஎஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி தான்.
பாஜக பேசும் அரசியல் வெகுஜனமக்கள் விரோத அரசியல் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம். வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை" என்று திருமாவளவன் கூறினார்.