செப்.10 முதல் 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம்..!
இது தொடர்பாக முகநூல் நேரலையில் இன்று திருமாவளவன் பேசியதாவது:-
அக்.2-ம் தேதி நாம் திட்டமிட்டபடி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி, தமிழகம் தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களை அணி திரட்டுவதும் உடனடியாக நாம் செய்ய வேண்டிய பணிகளாகும். வெல்லும் ஜனநாயகம் மாநாடு எப்படி தேசத்தின் கவனத்தை ஈர்த்ததோ, அதேபோல் இந்த மாநாட்டின் கருப்பொருளும் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடியதாகும்.
இது மிகவும் சவாலான மாநாடு. இதை வெற்றிகரமாக நடத்தியாக வேண்டும். அதற்காக மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையே, மாநாடு தொடர்பாக 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மண்டல வாரியாக நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கவிருக்கிறேன்.அதன்படி, 10-ம் தேதி விழுப்புரம், 11-ம் தேதி வேலூர், 12-ம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என 3 நாட்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்கிறேன்.
அதன் பின்னர், 17, 19, 21 தேதிகளில் முறையே கோவை, மதுரை, திருச்சிக்கு பயணிக்கிறேன். அப்போது கட்சி நிர்வாகிகள், முன்னணி பொறுப்பாளர்களை அரங்கக் கூட்டங்களில் சந்தித்து, மாநாட்டை நடத்துவதற்கான காரணம், தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை ஏன் வலியுறுத்துகிறோம், போதைப்பொருளும் மதுவும் உழைக்கும் மக்களை எப்படி பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது ஆகியன குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அக்.2-ம் தேதி மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.