1. Home
  2. தமிழ்நாடு

நிர்வாகிகளிடம் உருக்கமாகப் பேசிய திருமாவளவன்! என்ன சொன்னார் தெரியுமா ?

1

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், "விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. கட்சியில் கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கட்சி வளர்ச்சியடைய வளர்ச்சியடைய கட்சியின் முன்னணி தலைவர்களிடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்டுப்பாடு பிறருக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும்.

ஆனால், முன்னணி பொறுப்பாளர்கள் சமூக வலைதளங்களில் கட்சிக்கும் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலே கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டியிருக்கிறது என்பதுதான் கவலை அளிக்கிறது. நமக்குள் எழும் முரண்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்யக் கூடாது. இதை கடந்த 10 -15 ஆண்டுகளாக இதை கூறி வருகிறேன்.

யூடியூப் சேனல்களில் யாராவது பேட்டிக்கு அழைத்தால், சேனலின் பின்னணி குறித்து ஆராயாமல், எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் ஏதோ வாய்ப்பு தருகிறார்கள் என்ற அடிப்படையில் பங்கேற்பது, அவர்களின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நெருக்கடிக்கு ஆளாவதும் கவலை அளிக்கிறது. சாட்டிலைட் தொலைக்காட்சிகளாக இருந்தாலும், யூடியூப் சேனல்களாக இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அப்படி பேட்டி கொடுக்க அழைத்தால் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை இயக்கத்தின் நிர்வாகிகள் பெற வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரம் இது. கூட்டணி அமைப்பதற்கான உத்திகளை ஒவ்வொரு பெரிய கட்சிகள் கையாண்டு வருவதைப் பார்க்கிறோம்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு வந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் இப்போதே தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனம் போன போக்கில் கருத்துச் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆளாளுக்கு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கட்சி தோழர்களுக்கு இடையேயான முரண்பாடுகளை வெளியில் பேசுவது அறிவீனம், முதிர்ச்சியின்மை. நான் சொல்லும் இந்த விஷயத்தை யாருக்கோ சொல்கிறேன் என கடந்து போகாமல் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன் எனக் கருத வேண்டும்.

 

கோபி நயினார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி, அவர் திராவிடர் கழகம் குறித்து பேசிய கருத்து, இதையடுத்து கட்சித் தோழர்கள் மனம்போன போக்கில் சொல்லும் கருத்துகள் யாவும் கட்சி நலன்களுக்கு உகந்தவை அல்ல. தலைமையின் மீதான நன்மதிப்புக்கும் உகந்தவை அல்ல. எனவே, யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் கட்சியினர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். அல்லது சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை பேட்டி கொடுப்பதை தவிர்த்திட வேண்டும்." என்று பேசியுள்ளார்.

'அறம்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் விசிகவில் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தார். அண்மையில் இவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் திமுக குறித்தும் கூட்டணி கட்சிகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் திருமாவளவன் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

Trending News

Latest News

You May Like