1. Home
  2. தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பகிர்ந்து கொண்ட திருமாவளவன்..!

1

1989-ல் ‘தலித் பாந்தர்’ அமைப்பின் மாநில அமைப்பாளராக இருந்த திருமாவளவன், 1991-ல் இந்த அமைப்பை ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ என்று மாற்றினார். தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த திருமாவளவன், 1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதல் முதலாக தமாகாவுடன் கூட்டணி அமைத்தார். அந்த முதல் தேர்தலிலேயே அசத்திய திருமாவளவன் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார். 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் எம்எல்ஏ ஆனார். ஆனால் 2004ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2004 லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கிய திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றாலும், 2.50 லட்சம் வாக்குகள் பெற்று அசத்தினார். அதன் பிறகு 2006ம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணியில் இருந்த திருமாவளவனின் விசிக 9 இடங்களில் போட்டியிட்டது. அதில் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. 2009ல் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011ல் எதிலுமே திருமாவளவனின் விசிக வெற்றி பெறவில்லை. 2014ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டிலும் எதிலும் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தல் முதல் திமுக உடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தொடர்ந்து 2வது முறையாக சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ளார். திருமாவளவன் மொத்தமாக பார்க்கும் போது திமுக உடன் அதிக ஆண்டுகள் கூட்டணியில் இருந்துள்ளார். அதேநேரம் அதிமுக உடனும் சில முறை கூட்டணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில ஜெயலலிதாவை சந்திக்க மணிக்கணக்ககில் காத்திருந்த போதும் தன்னை சந்திக்க ஜெயலலிதா விரும்பவிலலை என்று பல வருடம் முன்பு தனக்கு ஏற்பட்ட அவமானத்தை திருமாவளவன் பகிர்ந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேமூர் பகுதியில் பிரச்சாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்ணை கட்டி காட்டிலே விட்டது போல் அரசியல் களத்தில் நான் நின்று கொண்டிருந்த போது, தூக்கி நிறுத்தியவர் கலைஞர். அதிமுக அப்போது என்னை கண்டுகொள்ளவில்லை.. ஒப்பந்தம் முறிந்து போனது. சந்திப்பதற்கு கூட அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உடன்படவில்லை.. நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் போயஸ் தோட்டம் போய் மணிக்கணக்கிலே காத்துக்கிடந்து விரக்தியில் வெளியேறிய நிலையில், இந்த தகவலை அறிந்த கலைஞர், தொலைபேசியிலேயே அழைத்து, என்னை அரவணைத்துக் கொண்டார். தேமுதிக கேப்டன் விஜயகாந்த் 8 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டிய பிறகு தான் அதிமுக கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படி தனித்து போட்டியிடவில்லை.. எத்தனை சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என்று உறுதிப்படுத்தவில்லை.. தமிழ்நாடு முழுக்க நாம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.. ஆனாலும் கலைஞர் அவர்கள் 2009ல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை வழங்கினார். இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் என்பது 12 சட்டமன்ற தொகுதிகள் ஆகும். இது எல்லாம் ஒரு சாதாரணமான முடிவு அல்ல. இது எல்லாம் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் கிடைக்கிற வாய்ப்பு கிடையாது..

எல்லோரும் சொந்த காலில் நின்று, குட்டிக்கரணம் போட்டு சாதித்து காட்டிய பிறகு தான் இந்த 20, 30 ஆண்டுகளிலே, மற்றவர்களால் கூட்டணியிலே சேர முடிந்தது. ஆனால் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி தனி சின்னத்தில் நின்று அங்கீகாரம் பெற விரும்புகிறோம் என்று சொன்ன போது, அதற்கும் வாழ்த்து சொன்னவர் கலைஞர். ஸ்டார் சின்னத்திலே 2009ல் போட்டியிட்டோம்.. இரண்டு பேரும் நாடாளுமன்றத்தில் தேர்வானோம்.. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரவிக்குமார் என்ன செய்கிறார், ஏது செய்கிறார் என்று திமுக எந்த குறுக்கீடும் செய்தது இல்லை.. உதய சூரியன் சின்னத்தில் நின்றவர் தானே என்று எந்த கட்டுப்பாட்டையும், குறுக்கீட்டையும் திமுக செய்தது இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Trending News

Latest News

You May Like